search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மருத்துவ கவுன்சிலிங்"

    மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியுள்ள நிலையில்,ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். #TNMedicalCounselling #MBBS #MedicalEducation
    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து மருத்துவ கவுன்சிலிங் நேற்று சென்னை பல்நோக்கு மருத்துவமனை அரங்கில் தொடங்கியது. மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினர்கள் கலந்து கொண்டனர். இதில் 40 பேர் இடங்களை தேர்வு செய்தனர்.

    இன்று பொது கலந்தாய்வு தொடங்கியது. இதில் பங்கேற்க மாநிலம் முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். 598 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

    ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கீட்டு கடிதங்களை வழங்கினார்.



    முதலிடம் பிடித்த மாணவர் ராஜ்செந்தூர் அபிசேக் (நீட் தேர்வில் 656) தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்தவர். இவர் தெலுங்கானாவில் உள்ள விஜயவாடாவில் தேர்வு எழுதினார்.

    மருத்துவ ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்த கீர்த்தனா அகில இந்திய ஒதுக்கீட்டில் டெல்லி எய்ம்ஸ் கல்லூரியை தேர்வு செய்ததால் ராஜ்செந்தூர் முதலிடத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொதுக் கலந்தாய்வு ரேங்க் பட்டியலில் தேர்வான 10 பேரில் 3 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவார்கள்.

    சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்த 10 பேர் வருமாறு:-

    1. ராஜ்செந்தூர் அபிசேக் (656)

    2. முகமது அசன் (644)

    3. ஆர்.எஸ்.சுப்ரஜா (613)

    4. சபரீஸ் (610)

    5. அனகா நெடுதலா சாம் குமார் (610)

    6. ஸ்ரீஸ் செந்தில்குமார் (609)

    7. திலகர் (606)

    8. ஆல்பர்ட் லிவியன் ஆல்வின் (604)

    9. சதீஷ் (604)

    10. ஜோஸ்வா அஜய் (602)

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது மருத்துவ கவுன்சிலிங்குக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவில் 40 பேர் சேர்ந்துள்ளார்கள். இன்று முதல் 7-ந்தேதி வரை பொது கலந்தாய்வு நடக்கிறது.

    இன்று 598 பேரும், நாளை 850 பேரும், நாளை மறுநாள் 1000 பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3501 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 இடங்கள் உள்ளன.

    பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 70 சதவீதம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மாணவர்களுக்கு 30 சதவீதம் பேருக்கு வாய்ப்பு உள்ளது.

    வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டை அரசுக்கு வழங்கி உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு உத்தரவை அரசு ஏற்கும்.

    இதுதவிர தனலெட்சுமி, ஆதிபராசக்தி கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு வெளிமாநிலங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 90 பேர் கலந்தாய்வு பட்டியலில் சேர்கிறார்கள். அவர்களில் 28 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர வாய்ப்புள்ளது.

    இருப்பிட சான்று பிரச்சினை தொடர்பாக 16 விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி கலந்தாய்வு நடக்கிறது.

    கடந்த 7 ஆண்டுகளில் 1000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கியது மூலமாகவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலான இடங்கள் உருவாக்கியதன் மூலம் இந்த இடங்கள் உருவாகி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMedicalCounselling #MBBS #MedicalEducation
    ×